திருவள்ளுவர் சிலைக்கு துாய்மை பணியாளர்கள் மரியாதை
சேலம்: கன்னியாகுமரி கடலில், 25 ஆண்டுகளுக்கு முன்பு, 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை, முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறுவினார். 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரசு சார்பில், திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா கொண்டாடி வருகின்றனர். அதன்படி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளாகத்தில், கன்னியாகுமரியில் உள்ளது போல திருவள்ளுவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, கலெக்டர் அலுவலகம் வரும் மக்கள் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்து கொண்டனர்.இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் வெள்ளி விழா கொண்டாடினர். பின்னர் அவர்கள், திருவள்ளுவர் சிலை முன் வண்ண வண்ண கோலமிட்டு, சிலைக்கு மலர் துாவி வணங்கினர்.