யுரியா உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடை உரிமம் ரத்து
ஆத்துார், சேலம் மாவட்டம் ஆத்துாரில் தென்னங்குடிபாளையம், தலைவாசலில் மணிவிழுந்தான், சார்வாய் ஆகிய பகுதிகளில், வேளாண் திட்டத்தில் செயல்படுத்தும் பணி குறித்து, சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தலைமையில் அலுவலர்கள், நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து சீனிவாசன் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் வேளாண், தோட்டக்கலை என, 1.15 லட்சம் ெஹக்டேரில், பயிர் சாகுபடி உள்ளது. இந்த பயிர்களுக்கு அனைத்து வகை உரங்களும் போதிய அளவில், வேளாண் கூட்டுறவு சங்கம், தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவையான அளவில் பெற்றுக்கொள்ளலாம். தலைவாசல், கெங்கவல்லி, ஆத்துார் வட்டாரங்களில் மக்காச்சோள சாகுபடி முழு வீச்சில் தொடங்க உள்ளதால், விவசாயிகள் தேவைக்கு ஏற்ப யுரியா உரங்களை, தனியார் விற்பனை நிலையங்களில் வினியோகிக்க வேண்டும். அப்படி வினியோகிக்கக்கூடிய உரங்களுடன், விவசாயிகளின் கோரிக்கை இல்லாமல், வலுக்கட்டாயமாக வேறு இணை பொருட்கள் அல்லது பயிர் ஊக்கிகளை திணிக்கக்கூடாது. யுரியா உரம் கூடுதல் விலைக்கு விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும். உர வினியோகம், இருப்பு தொடர்பான விபரங்களுக்கு, 94433 83304, 99946 31906 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.