மகனை முதல்வராக்க நினைக்கும் ஸ்டாலின் கனவு பலிக்காது: நயினார்
மேட்டூர்:''ஸ்டாலின் தேவையெல்லாம், வரும் தேர்தலில் அவரது மகனை முதல்வராக்க வேண்டும் என்பது தான். அவரது கனவு பலிக்காது,'' என, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 'தலைநிமிர தமிழனின் பயணம்' என, அனைத்து சட்டசபை தொகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார். நேற்று, 15ம் நாளாக மேட்டூர் வந்தார். தொடர்ந்து சதுரங்காடியில், பா.ஜ., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஹரிராமன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கடந்த, 2021ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு, தமிழகத்தில் மின்கட்டணத்தை, 3 மடங்கு அதிகரித்தனர். தேர்தல் அறிக்கையில் மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிப்போம் என கூறியதை நிறைவேற்றவில்லை.மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசு, சாலை வசதிக்கு, 40,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. அதனால் அந்த ஆட்சி சிறப்பாக இருந்தது. கடந்த, 11 ஆண்டுகளில் மத்திய அரசு, தமிழகத்துக்கு, 14 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஒன்றுமே வழங்கவில்லை என, தி.மு.க., அரசு கூறுகிறது.தமிழகத்தில் எந்த கிராமத்துக்கு சென்றாலும், போதை பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன. கோவையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குற்றம் நடந்த பின் நடவடிக்கை எடுப்பது பெரிய விஷயம் இல்லை. நடக்காமல் தடுக்க வேண்டும்.'டெல்டா'க்காரன் என, முதல்வர் கூறுகிறார். அங்கு மழையில் நெற்பயிர்கள் சேதமாகியுள்ளன. தி.மு.க., ஆட்சி நீடிக்க இன்னும், 180 நாட்களே உள்ளன. மத ரீதியான பிரச்னையை, தி.மு.க., அரசு துாண்டி விடுகிறது. ஸ்டாலின் தேவையெல்லாம், வரும் தேர்தலில் அவரது மகனை முதல்வராக்க வேண்டும் என்பது தான். அவரது கனவு, 2026 தேர்தலில் பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கு, பா.ஜ.,வினர் வீர வாள் பரிசளித்தனர். இதில், அ.தி.மு.க.,வின் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், பா.ஜ., - அ.தி.மு.க., மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.