விஜயபானுவிடம் பணம் கட்டியோருக்குதிருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும்
சேலம்:''விஜயபானுவிடம் பணம் கட்டிய அனைவருக்கும், நீதிமன்றம் மூலமே, திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, விஜயபானுவின் வக்கீல் பாலு தெரிவித்தார்.சேலம், அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை சார்பில், பணம் முதலீடு பெற்று, மக்களிடம் மோசடி செய்யப்பட்டது. சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அறக்கட்டளை தலைவர் விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையது முஹமத் ஆகியோரை கைது செய்தனர். முக்கிய நிர்வாகியான செந்தில்குமார், அவரது மனைவி கரோலின் ஜான்சி ராணியை, கடந்த வாரம் கைது செய்தனர்.செந்தில்குமார் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, விஜயபானு, ஜெயபிரதா ஆகியோரது வங்கி கணக்குகளில் இருந்து, செந்தில்குமாருக்கு, 1.95 கோடி ரூபாய், கரோலின் ஜான்சி ராணிக்கு, 1.36 கோடி ரூபாய் என பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. தற்போது அவர்கள் வங்கி கணக்கில் உள்ள, 14 லட்சம் ரூபாயை, போலீசார் முடக்கியுள்ளனர். விஜயபானு, ஜெயபிரதா ஆகியோர், நேற்று அழகாபுரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில், டி.எஸ்.பி., சந்திரசேகர் முன் ஆஜராகி கையெழுத்திட்டனர். நிபந்தனைப்படி, 30ம் நாளும் கையெழுத்திட்டு முடித்துள்ளனர்.தொடர்ந்து விஜயபானுவின் வக்கீல் பாலு நிருபர்களிடம் கூறியதாவது: விஜயபானுவுக்கு தெரியாமல், அறக்கட்டளை நிர்வாகியாக இருந்த செந்தில்குமார், கரோலின் ஜான்சி ராணி, அதிகளவில் மக்களிடம் பணம் பெற்றனர். விரைவில் செந்தில்குமார் மீது மக்கள் புகார் அளிப்பர். விஜயபானுவிடம் பணம் கட்டிய அனைவருக்கும், நீதிமன்றம் மூலமே, திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.