ஆடு திருடன் என்று சந்தேகித்து துரத்தியதால் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறிய ஆசாமி
கெங்கவல்லி: தலைவாசல் அருகே புனல்வாசல், ஏரிக்கரை பகுதி வழியே, நெய்வேலி - ஈரோடு வரை, 400 கிலோவாட் உயர் மின்னழுத்த பாதைக்கு, 250 அடி உயர கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று காலை, 6:00 மணிக்கு ஏறிய வாலிபர், இறங்க முடியாமல் தவித்தார். மக்களின் தகவல்படி, கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், 6:40க்கு சென்றனர். வாலிபரிடம் பேசி இறங்க வைத்து, கெங்கவல்லி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த, மனநலம் பாதிக்கப்பட்ட கருப்பையா, 45, என தெரிந்தது. கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து, குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'அதிகாலையில் புனல்வாசலில் நடமாடியவரை, ஆடு திருட வந்ததாக நினைத்து மக்கள் விரட்டியுள்ளனர். தப்பிக்க ஓடிய நிலையில், மின் கோபுரத்தில் ஏறியுள்ளார். அதிர்ஷ்டவசமாக மின்சார தாக்குதல் ஏற்படவில்லை. சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் கூறியதால், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்றார்.