தடையில்லா சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் நில எடுப்பு தனி தாசில்தார், ஜீப் டிரைவர் கைது
இடைப்பாடி, :நிலத்துக்கு தடையில்லா சான்று கொடுக்க லஞ்சம் வாங்கிய, நில எடுப்பு தனி தாசில்தார், அவருக்கு புரோக்கராக செயல்பட்ட, இடைப்பாடி தாலுகா அலுவலக ஜீப் டிரைவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் இடைப்பாடி, கோரணம்பட்டியை சேர்ந்த, விவசாயி தமிழரசன், 55. இவருக்கு கச்சுப்பள்ளியில், 13 சென்ட் நிலம் உள்ளது. திருச்செங்கோடு முதல் ஓமலுார் வரை, 4 வழிச்சாலை போடப்பட்டு வருகிறது. அதற்கு தமிழரசனின், 13 சென்ட்டை, நில எடுப்பு பிரிவினர் கையகப்படுத்தினர். ஆனால், 4 சென்ட் மட்டும் எடுத்துக்கொண்டு, அதற்குரிய இழப்பீடு தொகையை, தமிழரசன் வங்கி கணக்கில் செலுத்தினர்.மீதி, 9 சென்ட் நிலத்தில் வங்கி கடன் பெற, மகுடஞ்சாவடி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றபோது, அந்த நிலம், நில எடுப்பு பிரிவினர் பெயரில் இருந்தது. அதனால் தடையில்லா சான்றிதழ் கேட்டுள்ளனர். தமிழரசன், சேலம் நில எடுப்பு தனி தாசில்தார் கோவிந்தராஜூ, 43, என்பவரிடம், விண்ணப்பம் கொடுத்து, தடையில்லா சான்று கோரினார். அதற்கு அவர், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். பின் கோவிந்தராஜூவின் நண்பரான, இடைப்பாடி தாசில்தார் அலுவலக ஜீப் டிரைவர் வெங்கடாசலம், 50, மூலம் பேரம் பேசி, 5,000 ரூபாய் கொடுக்க, தமிழரசன் ஒப்புக்கொண்டார். இருப்பினும் தமிழரசன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.அவர்கள் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய, 5,000 ரூபாயை தமிழரசன், நேற்று இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் இருந்த வெங்கடாசலத்திடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், வெங்கடாசலத்தை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த தனி தாசில்தார் கோவிந்தராஜூவையும், போலீசார் கைது செய்தனர்.