5 ஆண்டாக பாதியில் நின்ற அங்கன்வாடி கட்டுமான பணி மீண்டும் தொடங்கியது
பனமரத்துப்பட்டி, அக். 19-பனமரத்துப்பட்டி, சந்தைபேட்டை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் செயல்பட்ட அங்கனவாடி மைய கட்டடம் சேதமடைந்ததால், இடித்து அகற்றப்பட்டது.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், அங்கன்வாடி மையம் கட்டும் பணி தொடங்கியது. இரண்டு மாதம் மட்டுமே கட்டுமான பணி நடந்தது. சுவர் கட்டிய நிலையில் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தொடக்கப்பள்ளியின் ஒரு அறையில் போதிய வசதி இல்லாமல், அங்கன்வாடி செயல்படுவதால், குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகினர்.இது குறித்த நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, கலெக்டர் உத்தரவு படி, பாதியில் நிறுத்தப்பட்ட அங்கன்வாடி கட்டுமான பணியை மீண்டும் தொடங்க, பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்தார். ஒன்றிய பொது நிதி, ரூ.7.50 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரித்து, தனியாருக்கு ஒப்பந்தம் விடாமல், அப்பணியை ஊரக வளர்ச்சித்துறையினர் மேற்கொண்டனர்.அங்கன்வாடி மைய கட்டடத்தின் உள்ளே வளர்ந்த செடி, கொடி அகற்றப்பட்டு, கான்கிரீட் மேற்கூரை அமைக்க கம்பி கட்டினர். கடந்த, 16ல், சிமென்ட், ஜல்லி, எம்.சாண்ட் கலந்து, கான்கிரீட் கலவை மூலம் மேற்கூரை அமைக்கப்பட்டது. அப்பணியை ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், ஒன்றிய பொறியாளர்கள் பார்வையிட்டனர்.