மாடர்ன் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய இறையன்பு
சேலம்: சேலம், மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, அப்பள்ளிக்கு நேரில் வந்தார். தொடர்ந்து, 6 முதல், பிளஸ் 2 வரை உள்ள மாணவ, மாணவியரை ஊக்குவித்து, உரிய அறிவுரை வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவியர் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:விரும்பி படித்தால் நன்றாக படிக்கலாம். மறதி ஏற்படாது. அட்டவணை தயாரித்து தவறாமல் படிக்க வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிடுவதும் அவசியம். 21 நாட்கள், அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், பின் தானாகவே விழிப்பு ஏற்பட்டு விடும். நான் படித்த காலத்தை விட, தற்போது நிறைய கவனச்சிதறல்கள், மொபைல் போன், சினிமா, 'டிவி'யால் ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் வைராக்கியத்தோடு தவிர்த்து படிக்க வேண்டும். சிறு வகுப்புகளிலேயே நல்ல பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். கவனச்சிதறலின்றி திரும்ப திரும்ப படிக்க வேண்டும். எழுதி பார்க்கவும் வேண்டும். ஆசிரியர்களும் எடுத்துக்காட்டுடன் தெளிவாக சொல்லித்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் அவருக்கு, பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.