ஆசிரியைக்கு தொடர்ந்து தொந்தரவு ஆறாவது முறையாக ஆசாமி கைது
கெங்கவல்லி, சேலம் அருகே பள்ளி ஆசிரியைக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த, டிராக்டர் டிரைவரை ஆறாவது முறையாக போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புனல்வாசலை சேர்ந்த, 50 வயது பெண், அதே பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். அதே ஊரைச் சேர்ந்த உறவினரும், டிராக்டர் டிரைவருமான சிவக்குமார், 40, பெரம்பலுாரில் குடும்பத்தினருடன் விவசாயம் செய்து வருகிறார்.இரு ஆண்டாக, ஆசிரியையிடம் தகராறு செய்வது, இடைமறித்து தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிப்பது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக கெங்கவல்லி போலீசில், ஐந்து முறை புகார் அளிக்கப்பட்டு, சிவக்குமார் கைதும் செய்யப்பட்டுள்ளார்.சிறையில் இருந்து வந்தவர், மீண்டும் நேற்று ஆசிரியையை வழிமறித்து, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளதாக, அவர் அளித்த புகார்படி, பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து, சிவக்குமாரை ஆறாவது முறையாக கெங்கவல்லி போலீசார் கைது செய்தனர்.