அட நம்புங்க... இதுதாங்க வேடப்பட்டி ஏரி வனத்துறை அலட்சியத்தால் வனமாக மாறியது...
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டி ஊராட்சி குள்ளப்பநாயக்கனுார் அருகே தும்பல்பட்டி ஊராட்சி எல்லையில்,இரு மலைக்கு நடுவே, பள்ளமான பகுதியில் வேடப்பட்டி ஏரி உள்ளது. வேடப்பட்டி மலைத்தொடரில் உற்பத்தியாகும் மழைநீர், சாலையை கடந்து ஏரிக்கு வரும். ஏரி நிரம்பி, குள்ளப்பநாயக்கனுார், திப்பம்பட்டி வழியே பனமரத்துப்பட்டி ஏரிக்கு வரும்.ஆனால் வேடப்பட்டி ஏரி பராமரிப்பின்றி, மரம், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. கரை பகுதி, தண்ணீர் வெளியேறும் பகுதிகள் சேதமடைந்துள்ளன. வேடப்பட்டி மலை பகுதியில் இருந்து ஏரிக்கு வரும் தடமும் புதர் மண்டியுள்ளது.இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:ஏரி பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 6 ஆண்டுக்கு முன் ஏரி நிரம்பியது. அதற்கு பின் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டது. தற்போது அடர்ந்த வனம்போல் மாறிவிட்டது. இந்த வழியே செல்லும் மக்கள், 'இங்கு ஏரி இருந்ததே; அதை காணவில்லையே' என கேட்கின்றனர். அந்த அளவுக்கு, ஏரிக்கான அடையாளமே தற்போது இல்லை. மலையில் உற்பத்தியாகும் மழைநீரை சேமிக்க, ஏரியை துார்வாரி, கரையை பலப்படுத்த, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.