காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வீரபாண்டி: மார்கழி மாத அமாவாசை, ஆங்கில ஆண்டில் நிறைவாக நேற்று வந்ததை தொடர்ந்து, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, கிருத்திகை என அனைத்து விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. ஆங்கில ஆண்டின் நிறைவாக நேற்று, மார்கழி மாத அமாவாசை அமைந்ததால், காலை, 6:00 மணிக்கு மூலவர் கந்தசாமிக்கு, 16 வகையான மங்கல பொருட்களால் அபிேஷகம் செய்து ராஜ அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது.இதே போல் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் கந்தசாமிக்கு தங்க கவசங்கள் அணிவித்து பூஜை செய்யப்பட்டது. சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் காளிப்பட்டி வந்து, நடந்து முடிந்த ஆண்டில் பல நல்ல திருப்பங்கள் அமைந்ததற்கு நன்றி தெரிவித்து வழிபட்டனர்.கண் திருஷ்டி தோஷங்கள் விலக வேண்டி, கோவில் கோபுரம் முன் ஏராளமான பக்தர்கள் உப்பு மிளகு போட்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். இதே போல், அமாவாசை கோவில் என்று அழைக்கப்படும், இளம்பிள்ளை அருகேயுள்ள சித்தர்கோவில் சித்தேஸ்வர சுவாமி கோவிலில் அமாவாசை நாளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்தேஸ்வரரை வழிபட்டனர்.