வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்
ஓமலுார், வவ்வால்கள் வாழ்ந்து வருவதால், கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, பண்ணப்பட்டி ஊராட்சியில் வவ்வால் தோப்பு என்ற பகுதி உள்ளது. அங்கு வயல் வெளிகளுக்கு நடுவே, அமைந்துள்ள பிரம்மாண்டமான ஆலமரத்தில், 5,000க்கும் மேற்பட்ட வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. இரவு நேரங்களில் இரைகளை தேடி பல்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டு, மீண்டும் அதே ஆலமரத்தில் வந்து தங்கிவிடும், கடந்த, 115 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஆலமரத்தில், 5,000க்கும் மேற்பட்ட வவ்வால்கள் வசித்து வருவதால், பட்டாசு வெடித்தால் அச்சம் ஏற்படும் என்பதால், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்காமல், பல ஆண்டுகளாக இந்த நடைமுறையை கடைப்பிடித்து வருகின்றனர்.இதுகுறித்து தோட்டத்து உரிமையாளர் ராஜேந்திரன், 58, கூறுகையில், '' எனது தாத்தா காலத்திலிருந்து, ஆலமரத்தில் வவ்வால்கள் குடியிருந்து வருகின்றன. இரவு நேரம் வெளியே செல்லும் வவ்வால்கள், மீண்டும் மரத்துக்கு வந்து விடும். மரத்தை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் யாரும் பட்டாசு வெடிக்காமல் உள்ளனர். வெளியூர்களிலிருந்து பண்டிகைக்கு வருவோர், பகல் நேரத்தில் மரத்தில் தொங்கு வவ்வால்களை பார்த்துவிட்டு செல்வது ஆனந்தமாக உள்ளது,'' என்றார்.