வேலுார், சித்துாரிலும் கைவரிசை காட்டிய பெண்; சேலத்தில் ஒரே நாளில் 25 பேர் போலீசில் புகார்
சேலம்: பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி, முதலீடு பெற்று கைதான அறக்கட்டளை பெண் நிர்வாகி, வேலுார், சித்துாரிலும் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. அங்கிருந்து வந்து, 25 பேர், நேற்று புகார் அளித்துள்ளனர்.சேலம், அம்மாபேட்டை, சிவகாமி திருமண மண்டபத்தில், புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையை, வேலுாரை சேர்ந்த விஜயபானு, 48, நடத்தினார். அதில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி, ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்தனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அங்கு சோதனை செய்து, முறைகேடாக, முதலீடாக பெறப்பட்ட, 12.65 கோடி ரூபாய், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயபானு, ஜெயப்பிரதா, பாஸ்கர், விஜயபானுவின் உதவியாளர் சையத் மஹ்மூத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அறக்கட்டளை நிர்வாகிகள் பெயரில் உள்ள வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஏஜன்டுகளிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: விஜயபானு, ஆந்திரா மாநிலம், சித்துாரில், இதே பெயரில் அறக்கட்டளை தொடங்கி மோசடியில் ஈடுபட்டு கைதானார். ஜாமினில் வந்த அவர், 2019ல், வேலுாரில் அறக்கட்டளை தொடங்கி, ஆயிரக்கணக்கானோரிடம் பணத்தை சுருட்டியுள்ளார். அதன்பின்பே சேலம் வந்து கைவரிசை காட்டியுள்ளார். விஜயபானு கைது குறித்து தெரிந்ததால், சித்துார், வேலுாரில் இருந்து, 25 பேர், நேற்று பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.