மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்த பெண்கள் உருளுதண்டம் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
சேலம், சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா, கடந்த, 22ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று சக்தி கரகம் எடுக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி தொடங்கியது. பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்தனர். ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் செய்து தங்க கவசம் சாத்துபடி செய்யப்பட்டது. அர்ச்சனைக்கு பின் மஹா தீபாராதணை காட்டப்பட்டது. தொடர்ந்து, வேண்டுதல் நிறைவேற்றி தந்த அம்மனுக்கு, மாவிளக்கு எடுத்தும், உருளுதண்டம் போட்டும், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் விடிய விடிய பொங்கல் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்த்து, அம்மனை தரிசனம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆடு, கோழியை பலியிட, கோவிலுக்கு பின்புறம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இத்திருவிழாவை முன்னிட்டு வரும், 8 காலை, கோவில் முன்பு தேரோட்டம் நடக்க உள்ளது. 9ல் கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் விடுதல், 10ல் சத்தாபரணம், 11ல் மஞ்சள் நீராட்டுதல், 12ல் பால்குட ஊர்வலம், மகா அபிேஷகம், கணபதி ஹோமம், கொடியிறக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. திருவிழாவை முன்னிட்டு, 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலில் ஏற்கனவே, 37 கேமராக்கள் உள்ள நிலையில், போலீசார் சார்பில் மேலும், 50 கேமராக்கள் பொருத்தி, பொங்கல் வைக்கும் இடம், மொட்டை அடிக்கும் இடம், ராஜகோபுரம் உள்ளிட்ட பகுதிகள், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. அதேபோல் குகை மாரியம்மன், காளியம்மன், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு மாரியம்மன் கோவில்களில் ஆடி திருவிழா நடக்கிறது.முளைப்பாலிகை ஊர்வலம்சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை ஒட்டி, செங்குந்தர் முளைப்பாலிகை நண்பர் குழு ஏற்படுத்தி, முதல்முறை முளைப்பாரி ஊர்வலம் நேற்று நடந்தது. பண்டரிநாதர் மடம் கோவிலில் இருந்து, 108 தட்டுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாலிகைகளை, விரதமிருந்த பெண்கள் தலையில் சுமந்து, மேள தாளம்முழங்க, முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக, கோவிலுக்கு கொண்டு சென்று அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபட்டனர். தீக்குண்டம் ஏற்றம்தாரமங்கலம், கண்ணனுார் மாரியம்மன் கோவில் அருகே உள்ள முத்துகுமாரசாமி கோவில் ஆடித்திருவிழா நிறைவாக, நேற்று மாலை பக்தர்கள் உடம்பில் சந்தனம் பூசி, வாளுடன் முக்கிய வீதிகள் வழியே கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பூஜை செய்து, திருவிழா நிறைவடைந்தது. தொடர்ந்து கண்ணனுார் மாரியம்மன் கோவிலில், தீ மிதி விழாவுக்கு, இரவு, 7.00 மணிக்கு மேல் தீக்குண்டம் நேற்று ஏற்றப்பட்டது. இன்று அதிகாலை, 4:00 மணி முதல் தீ மிதி விழா தொடங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.அன்னதானம் வழங்க பதிவு சான்றிதழ் தேவைகோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி அன்னதானம் வழங்க விரும்பும் தனி நபர்கள், நிறுவனங்கள், www.foscos.gov.inஎன்ற இணையதளம் மூலம் பதிவு செய்து, உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் பெற்று கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க வேண்டும். இதற்கு நாட்டாண்மை கழக கட்டடத்தில் செயல்படும், உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில், தங்கள் விபரங்களை ஆதார் அட்டை நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நாளில் மட்டும் அன்னதானம் வழங்க வேண்டும். அனுமதியின்றி அன்னதானம் வழங்கக்கூடாது. மேலும் அன்னதானம் வழங்க விரும்புவோர், உணவு பாதுகாப்பு அலுவலரை, சேலம் மாநகராட்சி மண்டலம் - 3ல் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவின்குமார் தெரிவித்தார்.