ரயிலில் லேப்டாப், மொபைல் திருட்டு மொரப்பூர் ஸ்டேஷனில் வாலிபர் கைது
சேலம், :திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், துரைசாமி நகரை சேர்ந்தவர் பிரபாகர், 43. சென்னையில் உள்ள, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார்.ஆயுதபூஜை விடுமுறையால், சொந்த ஊரான திருப்பூருக்கு கடந்த, 1 இரவு, சென்னை சென்ட்ரலில், ஏற்காடு எக்ஸ்பிரஸில் ஏறி பயணித்தார். முன்பதிவு பெட்டியில் பயணித்த அவர், இருக்கை அடியில் பையை வைத்துவிட்டு துாங்கியுள்ளார்.நேற்று முன்தினம் அதிகாலை, 5:30 மணிக்கு ரயில், மொரப்பூர் ஸ்டேஷன் வந்தபோது அவர் விழித்தார். அப்போது லேப்டாப், மொபைல்போன், ஏ.டி.எம்., ஆதார் கார்டுகள் இருந்த பை காணாமல்போனது தெரிந்தது. உடனே, மொரப்பூர் ஸ்டேஷனில் பணியில் இருந்த ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அவர்கள் அறிவுரைப்படி, சேலம் வந்து, சேலம் ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்தார். இந்நிலையில் சந்தேகப்படும்படி மொரப்பூர் ஸ்டேஷனில், 2 பைகளுடன் நின்றிருந்த வாலிபரை பிடித்து, போலீசார் சோதனை செய்ததில், லேப்டாப் அடங்கிய பை இருந்தது.தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, வெங்கடதாம்பட்டி புதுாரை சேர்ந்த சிலம்பரசன், 31, என்பதும், பிரபாகரின் பையை திருடி, மொரப்பூரில் இறங்கி தப்ப முயன்றதும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்து, பையை மீட்டனர்.