எஸ்.புதுாரில் காடு வளர்ப்பை அதிகரிக்க வலியுறுத்தல்
எஸ்.புதுார் : எஸ்.புதுாரில் தோட்டம், காடுகளில் பழமையான மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது.மாவட்டத்தில் மலையும் மலை சார்ந்த இடமுமாக விளங்கும் இவ்வொன்றியத்தில் ஏராளமான மரங்கள் இயற்கையாக வளர்ந்துள்ளன. வனத்துறை சார்பிலும் பல இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மலைச்சரிவுகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் நிலங்களை வெளியூர்களில் இருந்து வரும் ரியல் எஸ்டேட் குரூப் விவசாயிகளிடமிருந்து நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை தோட்டங்களாக மாற்றி வருகின்றனர். அப்படி மாற்றும் போது அங்குள்ள பழமையான மரங்களை வெட்டி விடுகின்றனர்.ஒன்றியத்தில் மரங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. கோடைகாலத்தில் கூட குளிர்ச்சியாக விளங்கும் இவ்வொன்றியத்தில் சில காலமாக நிலைமை மாறி மழையளவு பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஒன்றியத்தில் தேவையின்றி மரங்களை வெட்ட தடை விதிப்பதுடன், கூடுதல் மரங்களை நடவு செய்து காடுகளின் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுபட வேண்டும்.