உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயன்பாட்டுக்கு வராத புதிய சந்தை கட்டடம்; வெயிலில் தவிக்கும் வியாபாரிகள்

பயன்பாட்டுக்கு வராத புதிய சந்தை கட்டடம்; வெயிலில் தவிக்கும் வியாபாரிகள்

காரைக்குடி : காரைக்குடி கணேசபுரம் சந்தைப்பேட்டை வளாகத்தில் புதிய கட்டடம் திறக்கப்பட்டும், பயன்பாட்டுக்கு வராததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வெயிலில் சிரமப்படுகின்றனர். காரைக்குடி கணேசபுரம் சந்தைப்பேட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 6.74 ஏக்கர் பரப்பளவில் வாரச்சந்தை அமைந்துள்ளது. இங்குள்ள சந்தைக்கு கட்டடம் இல்லாததால் வியாபாரிகள் சிரமப்பட்டனர்.இந்நிலையில், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 90 கடைகளுடன் கூடிய புதிய சந்தை கட்டப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக கட்டடத்தை திறந்து வைத்தார். திறப்பு விழாவில், அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 400-க்கும் மேற்பட்ட காய்கறி, பழக்கடை, மீன்கடைகள் உள்ள நிலையில் 90 கடைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடமும்திறப்பு விழா செய்தும் பயன்பாட்டிற்கு வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் வெயிலில் சிரமப்படுகின்றனர். மழைக் காலங்களில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.400க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இருப்பதால் 90 கடைகள் யாருக்கு வழங்குவது என்ற குழப்பம் நிலவுகிறது. புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கணேசபுரம் திங்கள்கிழமை சந்தையில் 400 கடைகள் கட்டப்பட உள்ளது. முதலாவதாக 90 கடைகள் கட்டப்பட்டுள்ளது. விரைவில் 300 கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 90 கடைகள் மட்டுமே இருப்பதால் வியாபாரிகளுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி யாருக்கு கடை என்று முடிவு செய்வதாக தெரிவித்துள்ளனர். வியாபாரிகள் பேசி முடிவு செய்த பிறகு, அவரவருக்கு கடைகள் முறையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை