உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாலிபர் கொலையில் 2 பேர் கைது: உடலை பெற உறவினர்கள் மறுப்பு

வாலிபர் கொலையில் 2 பேர் கைது: உடலை பெற உறவினர்கள் மறுப்பு

சிவகங்கை: சிவகங்கை வாலிபர் கொலையில் இருவர் கைதான நிலையில், கொலையாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரி, உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர்.சிவகங்கை மாவட்டம், தமறாக்கியை சேர்ந்த செல்லச்சாமி மகன் மனோஜ் பிரபு, 29; ஜூலை 4ல் நண்பர்களுடன் இடையமேலுாரில் நடந்த இன்னிசை நிகழ்ச்சியை பார்த்து விட்டு, டூ - வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். புதுப்பட்டி அருகே காரில் வந்த ஒரு கும்பல், மனோஜ் பிரபுவை கொலை செய்து தப்பியது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்ள மனோஜ் பிரபு உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில், தமறாக்கியைச் சேர்ந்த கார் டிரைவர் வசந்தகுமார், 21, வேலாங்கப்பட்டியைச் சேர்ந்த சூர்யா, 26, ஆகியோரை சிவகங்கை போலீசார் கைது செய்தனர்.தப்பிய அபிமன்யு உட்பட ஆறு பேரை தேடி வருகின்றனர். ஆனால், 'கொலையாளிகள் அனைவரையும் கைது செய்தால் மட்டுமே, மனோஜ் பிரபு உடலை வாங்குவோம்' என, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.போலீசார் கூறுகையில், 'மனோஜ் பிரபுவை கொலை செய்ய, அவரை நோட்டமிட்டுள்ளனர். இடையமேலுார் கோவில் திருவிழாவுக்கு வந்த அவரை, அங்கேயே கொலை செய்ய முயன்றதில் வாய்ப்பு கிட்டவில்லை. இதையடுத்து, வீட்டிற்கு திரும்பியவரை, காரில் பின்தொடர்ந்து சென்று வெட்டிக்கொலை செய்துள்ளனர்' என்றனர்.பிடிபடாமல் உள்ள கொலையாளிகளால் அவரது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் உள்ளதால் ராணுவ வீரரான அவரது தம்பி அஜித் குமார் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ