மாவட்டத்தில் 4.65 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை
சிவகங்கை: மாவட்ட அளவில் அனைத்து அங்கன்வாடி, துணை சுகாதார நிலையங்களில் நாளை 4.65 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம் செய்யப்பட உள்ளது. தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பிப்.,10 அன்று சுகாதாரத்துறையின் சார்பில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலையம், பள்ளிகள், கல்லுாரிகளில் ஒன்று முதல் 19 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், இருபது முதல் 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி, தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தவிர்த்து) 'அல்பெண்டசோல்' மாத்திரைகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த குடற்புழு நீக்க மாத்திரை 1 முதல் 19 வயதிற்கு உட்பட்ட 3 லட்சத்து 77 ஆயிரத்து 552 பேருக்கும், 20 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட பெண்கள் 87,625 பேர் என ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 65 ஆயிரத்து 177 பேருக்கு இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது. நாளை நடக்கும் இந்த முகாமில் 210 சுகாதார செவிலியர்கள், 17 ஆஷா பணியாளர், 1295 அங்கன்வாடி ஊழியர், 1655 பள்ளி, கல்லுாரி பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மூலம் இந்த மாத்திரை வினியோகம் செய்யப்படும். இந்த மாத்திரை உட்கொள்வதின் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இன்றி ஆரோக்கியமாக வாழவும், கல்வித்திறன் அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.