வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது மாதிரியான விசயத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்புவனம் : திருப்புவனம் அருகே அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக ராங்கியம் கண்மாய் உபரி நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்புவனம் 4வது மடை பாசனத்தை நம்பி நயினார்பேட்டை கிராமப் பகுதியில் 110 ஏக்கரில் நெல், வாழை, கரும்பு, வெண்டை, வெற்றிலை உள்ளிட்ட விவசாயம் செய்யப்படுகிறது. வயல்களில் தேங்கிய மழை நீர் வெளியேற குறுகிய பாசன கால்வாய் உள்ளது.இந்நிலையில் கிருதுமால் நதி மூலம் பாசன வசதி பெறும் ராங்கியன் கண்மாய் நிரம்பி உபரி நீர் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் நயினார் பேட்டை கிராம விளை நிலங்களுக்குள் புகுந்து விட்டது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தண்ணீரில் வாழை, கரும்பு, தென்னை, வெண்டை, நெல், வெற்றிலை மூழ்கி அழுக தொடங்கியுள்ளன. ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் மூன்று லட்ச ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். குறுகிய வடிகாலில் ராங்கியன் கண்மாய் உபரிநீர், திருப்புவனம் கண்மாய் பாசன தண்ணீர் இணைந்து அதன் கொள்ளளவை தாண்டி செல்வதால் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.விவசாயி கதிரேசன் கூறுகையில்: நயினார்பேட்டையில் வாழை பயிரிட்டுள்ளோம், ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்துள்ளோம், கடந்த பத்து நாட்களாக வாழைதோப்பினுள் தண்ணீர் இடுப்பளவு தேங்கியுள்ளது. இதனால் வாழை மரங்கள் அழுக தொடங்கியுள்ளது. வெண்டை, நெல் பயிர்கள் மூழ்கி விட்டன. கடன் வாங்கி பயிரிட்ட நிலையில் விளைச்சல் வரும் போது சேதம் ஏற்பட்டால் தான் இழப்பீடு கிடைக்கும். ஒரு மாத சேதத்திற்கு இழப்பீடு கிடைக்குமா என தெரியவில்லை, என்றார். விவசாயி சோணை கூறுகையில்: எங்களுக்கு திருப்புவனம் 4வது மடை பாசனம் தான்.எனவே தேவைக்கு ஏற்ப தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம், மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கினால் வடிகால் வசதி உண்டு, ராங்கியன் கண்மாய் நிரம்பி அதன் உபரி நீர் கலுங்கு வழியாக வெளியேறி சொக்கநாதிருப்பு கண்மாய்க்கு செல்லும், ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் செல்ல வசதியில்லாததால் எங்கள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விட்டது.ஐந்து ஆண்டுகளாக செப்டம்பர், அக்டோபர் மழை காலங்களில் இந்த பிரச்னை வருகிறது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் பாதிக்கப்பட்ட நேரத்தில் வந்து ஆறுதல் சொல்வதுடன் மழை நின்ற உடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி சரி செய்கிறோம் என்கின்றனர். அதன் பின் நிதி இல்லை என கண்டு கொள்வதில்லை. இதனால் ஒவ்வொரு வருடமும் பலத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது, என்றார். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பூமிநாதன் கூறுகையில்: ராங்கியன் கண்மாய் உபரி நீர் இரண்டு வழிகளில் வெளியேறும். இதில் 60 சதவிகித தண்ணீர் பெரிய கால்வாய்,அல்லிநகரம் வழியாக சொக்கநாதிருப்பு கண்மாய்க்கு செல்லும், மீதி 40 சதவிகித தண்ணீர் தான் நயினார்பேட்டை வழியாக வெளியேறும், கால்வாய் பாலம் குறுகி இருப்பதால் தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் செல்கிறது. ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து தாசில்தாரிடம் தெரிவித்துள்ளோம், அடுத்தாண்டிற்குள் சரி செய்யப்படும், என்றார். பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்புவனம் தாலுகா அலுவலக வாசலில் போராட்டம் நடத்திய பின் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
இது மாதிரியான விசயத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.