உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் 60 டாக்டர்கள் பணியிடம் காலி

சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் 60 டாக்டர்கள் பணியிடம் காலி

சிவகங்கை: சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 60 டாக்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் பிரிவில் பயிற்சி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதால் நோயாளிகள் தயங்குகின்றனர்.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தினசரி 1000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 800-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என 210க்கும் மேற்பட்ட டாக்டர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் தற்போது 150க்கும் குறைவான டாக்டர்களே பணிபுரிகின்றனர்.இங்கு 60 டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு வரும் டாக்டர்கள் உடனடியாக மாறுதலில் சென்று விடுகின்றனர். இல்லையென்றால் மாற்று பணியில் வேறு அரசு மருத்துவமனையில் பணிபுரிகின்றனர். இதேநிலை தொடர்ந்து நீடிப்பதால் மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையை சரி செய்ய முடியாதநிலை உள்ளது. இங்கு 6 மாதத்திற்கும் மேலாக கார்டியாலஜி டாக்டர் இல்லை. கார்டியாலஜி ஆலோசனை பெற இங்கு வரும் நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.அதேபோல் நெப்ராலஜி, ரேடியோலஜி பிரிவுகளில் தொடர்ந்து பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் புறநோயாளிகள் பிரிவிலும், தாய்வார்டிலும் பெரும்பாலும் பயிற்சி டாக்டர்களே பணியில் உள்ளனர். நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை கிடைக்கிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.நிலைய மருத்துவர் மகேந்திரன் கூறுகையில், மருத்துவமனையில் அனைத்து பணியிடங்களிலும் டாக்டர்கள் உள்ளனர். கல்லுாரியில் மருத்துவக் கவுன்சில் தான் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ