ரோட்டில் திரியும் நாலாயிரம் மாடுகளால் விபத்து; மாவட்டத்தில் விவசாயம் பாதிப்பதாக குமுறல்
மாவட்ட அளவில் சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை, திருப்புவனம், சிங்கம்புணரி போன்ற இடங்களில் கோயில்களுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட மாடுகள், வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளை பகலில் ரோட்டில் விடுவது போன்ற காரணத்தால் மாவட்ட அளவில் 4,000 க்கும் மேற்பட்ட மாடுகள் ரோட்டில் திரிவதாக கால்நடைத்துறையினர் கணக்கெடுத்துள்ளனர். கோயில்களுக்கு நேர்த்தியாக விடப்படும் மாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகமே கோசாலை அமைத்து, அவற்றை பாதுகாக்க வேண்டும். அதே போன்று உள்ளாட்சி அமைப்புகள் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். ஆனால் இவற்றை உள்ளாட்சி அமைப்புகள், கோயில் நிர்வாகமும் முறையாக செய்யவில்லை. ரோட்டில் திரியும் மாடுகளின் கழுத்தில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்' ஒட்டவில்லை. இந்த மாடுகள் ரோட்டில் படுத்திருக்கும் போது, வாகனங்கள் மோதி விபத்திற்கு உள்ளாகின்றன. அதே போன்று சிங்கம்புணரி, தேவகோட்டை பகுதியில் திரியும் மாடுகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இது போன்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்க ரோட்டில் திரியும் மாடுகளை கோசாலையில் அடைத்து பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.