பிள்ளையார்பட்டியில் இன்று முதல் கூடுதல் நேர நடை திறப்பு; ஐயப்ப, முருக பக்தர்கள் தரிசனத்திற்கு வாய்ப்பு
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் முருகன் மற்றும் ஐயப்ப பக்தர்களின் சுவாமி தரிசனத்திற்காக கார்த்திகை மாதம் முதல் கூடுதல் நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நகரத்தார் கோயிலான இங்கு குடவரையில் மூலவர் விநாயகர் தியானநிலையில் எழுந்தருளுகிறார். கார்த்திகை துவங்கியவுடன் பழநி, சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்குவர். தொடர்ந்து கோயில்களுக்கு சென்று சாமி தரிசனத்தை துவங்குகின்றனர். இதனால் பிள்ளையார்பட்டிக்கு பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும். பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை, மார்கழி மாதங்களில் சுவாமி தரிசனம் செய்ய கூடுதல் நேரம் நடை திறக்கப்படுகிறது. இது குறித்து நடப்பு காரியக்காரர்கள் காரைக்குடி சித.பழனியப்பச் செட்டியார், நச்சாந்துபட்டி மு.குமரப்பச் செட்டியார் கூறியதாவது, வழக்கமாக கோயில் நடை மதியம் 12:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை சாத்தப்பட்டு இருக்கும். மாலை 4:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை நடை திறந்திருக்கும். தற்போது காலை 6:00 மணிக்கு துவங்கி இரவு 8:45 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும் என்றனர். கூடுதல் நேரம் நடை திறந்திருந்தாலும் வழக்கம் போல் நித்ய பூஜைகள் நடைபெறும்.