உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பாலாற்றில் நீர் வரத்தின்றி திருப்புத்துாரில் விவசாயம் அழிகிறது நிரந்தர பாசனம் இல்லாததால் குறையும் வேலைவாய்ப்பு

 பாலாற்றில் நீர் வரத்தின்றி திருப்புத்துாரில் விவசாயம் அழிகிறது நிரந்தர பாசனம் இல்லாததால் குறையும் வேலைவாய்ப்பு

திருப்புத்துாரில் நெல் சாகுபடி 1990ம் ஆண்டில் 15 ஆயிரம் ஏக்கராக இருந்தது. தற்போது அது 5 ஆயிரம் ஏக்கராகி விட்டது. ஆறுகளில் நீர்வரத்தின்றி, போதிய மழை இன்றி விவசாய சாகுபடி குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 7000 ஏக்கராக இருந்த நெல் சாகுபடி தற்போது 5200 ஏக்கராக குறைந்துள்ளது. நிரந்தரமான பாசன வசதியில்லாததால் ஆடிப்பட்டத்தில் உழவு செய்யவோ, விதைக்கவோ நீர் இல்லை. இதனால் பட்டம் தள்ளிப்போய் நெல்சாகுபடி செய்கின்றனர். இதனால் முன்பு ஏக்கருக்கு 40 மூடை வந்த நிலையில் தற்போது 25 மூடை மகசூல் கிடைப்பதும் அரிதாகி விட்டது. வெளியூர் சென்ற தொழிலாளர்கள் குறைந்து விட்ட விவசாய பணிகளால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் பலரும் வேலை தேடி வெளியூர் சென்று விட்டனர். மற்றும் பலர் வேறு வேலைகளுக்கு குறிப்பாக கட்டடத் தொழிலுக்கும், 100 நாள் வேலைக்கும் சென்று விட்டனர். இதனால் தற்போது நீர் பற்றாக்குறையுடன் தொழிலாளர் பற்றாக்குறையும் சேர்ந்து நெல்சாகுபடி பரப்பு குறைந்து விவசாய வேலைவாய்ப்பு மேலும் குறைந்து வருகிறது. சரிந்த நிலத்தடி நீர்மட்டம் ஆறுகளில் நீர்வரத்தின்றி போனதால் ஆறுகளில் இருந்த மணல் வளம் வெகுவாக குறைந்து வருகிறது. அதில் அனுமதியின்றி திருடியும் எடுக்கப்பட்டதால் ஆற்றில் தரமான மணல் இன்றி நீர்சேமிப்பு இன்றி நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் ஆயிரக்கணக்கானதென்னை மரங்கள் பட்டுப்போய், தற்போது கிணறுகள் வற்றி விட்டதால் தென்னந்தோப்புகளும் குறைந்து விட்டன. இதனால் தேங்காய் விற்பனை சார்ந்த வேலை களான கீற்று முடையும் தொழில்கள் நசிந்து விட்டன. குறைந்து விட்ட தென்னந்தோப்புக்களால் பலர் விவசாய வேலைகளை இழந்து வெளியூர் சென்றனர். குறைந்த வேலை வாய்ப்பு ஆற்று மணல், மணல் கலந்த செம்மண் ஆகியவை இப்பகுதியில் பரவலாக தரமான செங்கல் உற்பத்தி செய்யும் காளவாய் தொழில் செயல்பட உதவின. அடுப்பிற்கு விறகு வெட்ட, செங்கல் அறுக்க, சூளைத் தொழிலாளர் என்று பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்போது விரல் விட்டு எண்ணும் அளவிலேயே காளவாசல்கள் உள்ளன. மற்ற ஊர்களுக்கு செங்கல் விற்ற காலம் போய் தற்போது வெளியூர்களிலிருந்து செங்கல் வாங்கும் நிலைக்கு மாறி விட்டது. இங்கும் வேலை வாய்ப்பிழந்த தொழிலாளர்கள் திருப்புத்தூரிலிருந்து வெளியேறினர். குறையும் நீர்வளத்தால் உள்ளூர் சார்ந்த வேளாண் தொழில் வேலைவாய்ப்பு குறைந்த வருவது 50 ஆண்டுகளாக தொடர்கிறது. முன்பு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீர்வரத்து வந்த பாலாற்றில் தற்போது 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்றாகி விட்டது. ஆற்றில் அதிகரிக்கும் தடுப்பணைகளும், அதில் நீர்வரத்து மடை மாற்றப்படுவதும், குறைந்து வரும் மழைப்பொழிவும் திருப்புத்துார் பாலாற்றில் நீர்வரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. விவசாயம்,விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்பையும் குறைப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து நிரந்தர பாசனவசதிக்கு திட்டமிட வேண்டியது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை