அழகாபுரி கண்மாய் மடை சேதம்
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கண்மாய் கலுங்கிலிருந்து தண்ணீர் வெளியேற முடியாத அளவிற்கு வரத்துக் கால்வாய் தூர்ந்து விட்டதாக கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். கல்லல் ஒன்றியம் கீழையப்பட்டி கிராமத்தில் கீழைய கண்மாய், செட்டியகண்மாய், பூச்சியங் கண்மாய்கள் நிரம்பி அழகாபுரி கண்மாய்க்கு சென்று பெருகிய பின் அழகாபுரி கண்மாய் கலுங்கிலிருந்து நீர் வெளியேறுவது வழக்கம். கடந்த 7 ஆண்டுகளாக இக்கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து செல்லவில்லை.கடந்த 2 மாதங்களாக பெய்தமழையில் 4 கண்மாய்களும் பெருகி மறுகால் பாய்கிறது. ஆனால் அழகாபுரி கண்மாய் கலுங்கு துார்ந்துவிட்டதால், நீர் வெளியேற முடியவில்லை. இதனால் கிராமத்திலுள்ள வரத்துக்கால்வாய்க்கே நீர் திரும்பி விடுகிறது.இங்குள்ள அழகாபுரி கண்மாயில் ரூ.14.93 லட்சத்தில் புதிய கலுங்கு கட்டப்பட்டது. தொடர்ந்து இதை பராமரிக்காமல் விட்டதால், இவை துார்ந்துபோய்விட்டதாக கிராமத்தினர் புகார் அளித்துள்ளனர்.