மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அறங்காவலர் குழு நியமனம் தாமதம்
திருப்புவனம் : பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் அறங்காவலர் குழு நியமனம் தாமதமாகி வருவதால் காணிக்கை எண்ணும் பணி , வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி வெள்ளி உள்ளிட்ட விசேஷ தினங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் முழுவதும் தி.மு.க.,அரசு பொறுப்பேற்ற பின் கோயில்களில் அறங்காவலர்கள் குழு நியமிக்கப்பட்டது. ஆனால் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு ஐந்து பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது வழக்கம்.அவர்களில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டு கோயிலின் வளர்ச்சி பணிகள், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி உள்ளிட்டவைகளை மேற்கொள்வார்கள். மடப்புரம் கோயிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்கப்படாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.மூன்று வருடங்களாக அறங்காவலர் குழு நியமிக்கப்படாமலேயே நிர்வாகம் நடந்து வருகிறது. இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில் விரைவில் அறங்காவலர் குழுவை நியமிக்க வேண்டும் எனபக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.