திருப்புவனத்தில் தொடர் சம்பவம் ஒரு பாதையை மூடிய அதிகாரிகள்
திருப்புவனம்: திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் தொடர்ந்து மனுக்கள், வாக்காளர் அட்டை வைகை ஆற்றில் வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து அலுவலகத்தின் ஒரு நுழைவு வாயிலை பூட்டு போட்டு அதிகாரிகள் பூட்டியுள்ளனர். திருப்புவனம் தாலுகாவில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கொந்தகை ஆகிய மூன்று வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய 154 கிராமங்கள் உள்ளன. ஸ்மார்ட் கார்டு, பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண தினசரி 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல், சமூக நல பாதுகாப்பு திட்டம், நில அளவை ஆகிய மூன்று பிரிவுகளில் 26 பேர் பணிபுரிகின்றனர். அலுவலகத்திற்கு உள்ளே வரவும், வெளியே செல்லவும் இரண்டு பெரிய நுழைவு வாயில் உள்ளன. இரண்டு வாயில்கள் வழியாக பொதுமக்கள் சென்று வந்தனர். ஆகஸ்ட் 29 ல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள், செப்டம்பர் 10 ல் வாக்காளர் அடையாள அட்டை வைகை ஆற்றில் கிடந்தன. தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. இதனையடுத்து அதிகாரிகள் தாலுகா அலுவலகத்தில் ஒரு பாதையை மூடி விட்டனர். உள்ளே வரவும் வெளியே செல்லவும் ஒரே பாதையை தான் இனி பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்பவர்களை எளிதில் கண்காணிக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.