திருப்பாச்சேத்தியில் பாலம் கட்டுமான பணி மந்தம்: விவசாயிகள், பொது மக்கள் அவதி தொடர்கிறது
திருப்பாச்சேத்தி, கல்லுாரணி, மாரநாடு, கானுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த கீரை, காய்கறிகள், தேங்காய், வாழை இலைகள், வாழைக்காய் உள்ளிட்டவற்றை சிவகங்கைக்கு சென்று விற்பனை செய்து விட்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கம்.இதுதவிர சிவகங்கை கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு இப்பகுதி மக்கள் பலரும் திருப்பாச்சேத்தி - படமாத்துார் சாலையை பயன்படுத்தி தான் சென்று வருகின்றனர். இப்பாதையில் தினசரி ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்களும் சென்று வருகின்றன.போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பாதையில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக நான்கு இடங்களில் பாலம் கட்டுமான பணி மந்த கதியில் நடந்து வருகின்றன. மாற்றுப்பாதை கூட இல்லாமல் பணிகள் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.பாலப்பணிகள் நடப்பது குறித்து எந்த வித தகவல் பலகைகளும் வைக்கப்படவில்லை. இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பலரும் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் விழுந்து காயமடைகின்றனர். விவசாயிகள் பலரும் டூவீலரில் தான் இப்பாதையை கடந்து சென்று வருகின்றனர். பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் இரும்பு கம்பிகள், கற்கள் உள்ளிட்டவை குவித்து வைக்கப்பட்டிருப்பதால் அச்சத்துடனேயே சென்று வர வேண்டியுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.