பஸ்கள் மோதல்: 12 பேர் காயம்
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் டிரைவர் உட்பட 12பேர் காயமடைந்தனர். மதுரையில் இருந்து நேற்று மதியம் 1:50 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை பரமக்குடியைச் சேர்ந்த சக்திவேல் இயக்கினார்.பத்து நிமிடம்கழித்து பரமக்குடிக்கு தனியார் பஸ் கிளம்பியது. திருப்புவனத்தை கடந்த உடன் தனியார் பஸ் பல இடங்களில் அரசு பஸ்சை முந்த முயன்றது. பாப்பாங்குளம் விலக்கில் முந்த முயன்ற போது நிலை தடுமாறி அரசு பஸ்சின் பின்புற படிக்கட்டு அருகேயும், சாலையோர பனைமரத்தில் மோதியும் தனியார் பஸ் நின்றது.இதில் தனியார் பஸ் முன்புற கண்ணாடி நொறுங்கியது. விபத்தில் தனியார் பஸ்சில் பயணம் செய்த சந்திரசேகர், முத்துலட்சுமி, கோட்டைமுத்து, ஹரிப்பிரியா உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். இரண்டு பஸ்கள் மோதிக்கொண்டதாக வந்த தகவலையடுத்து மதுரை, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் 108 ஆம்புலன்ஸ் வந்து காயமடைந்தவர்களை திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.