உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கால்வாய் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் போராட்டம்

 கால்வாய் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் போராட்டம்

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள ஆலத்துப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள், விவசாயத்தின் நீர் ஆதாரமான வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். காரைக்குடி தாலுகா, பலவான்குடி ஊராட்சிக்குட்பட்ட ஆலத்துப்பட்டி கண்மாயை நம்பி 150 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. இக்கண்மாயின் நீர் ஆதாரமாக உள்ள வரத்து கால்வாய் நெற்புகப்பட்டியிலிருந்து வருகிறது. இந்த வரத்துக் கால்வாயை ஒருவர் ஆக்கிரமித்து வேலி அமைத்ததாக கூறி, வரத்து கால்வாய் அருகே விவசாயிகள் கூடினர். பின்பு சாலையில் சிறிது நேரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். இன்ஸ்பெக்டர் சுந்தரி, மற்றும் வருவாய்த் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். கிராம மக்கள் கூறுகையில்: வனப்பகுதியில் இருந்து நெற்புகப்பட்டி வரத்து கால்வாய் வழியாக கண்மாய்க்கு நீர் வருகிறது. கண்மாயை நம்பி 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தனிநபர் ஒருவர், தனது இடத்தின் அருகில் உள்ள வரத்து கால்வாயை தடுப்புச் சுவர் ஏற்படுத்தியும், முள்வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளார். தவிர வழிநெடுகிலும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது. உடனடியாக வரத்து கால்வாயை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ