போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு: சார் பதிவாளர் மீது வழக்கு
சிவகங்கை: காளையார்கோவிலில் ரத்து செய்யப்பட்ட ஆவணத்தை பயன்படுத்தி விற்பனை செய்த பத்திர எழுத்தர், சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புலியடிதம்பம் செபஸ்தியான் மகன் மிக்கேல் 63. இவருக்கு காளையார்கோவில் தாலுகா மொங்கன் கண்மாய் பகுதியில் 3 ஏக்கர் 40 சென்ட் புஞ்சை நிலம் உள்ளது. இந்த சொத்தை பராமரிப்பதற்காக 2007 மே 30ல் சென்னை வேளச்சேரி சந்தியாகு மகன் சேசு ராஜ் 45க்கு அதிகார ஆவணம் பதிவு செய்து கொடுத்தார். பின் 2007 ஜூன் 27 காளையார்கோவில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்த ஆவணம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் 2008 மே 26ல் போலியான ஆவணங்கள் தயார் செய்து சேசுராஜ் தனது மனைவி சகாய ராணிக்கு 40 அந்த சொத்தை காளையார் கோவில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்துள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த பத்திர எழுத்தர், ஆவணங்களை முறையாக பரிசீலனை செய்யாமல் பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் மீது நட வடிக்கை எடுக்க செப்.1ல் சிவகங்கை எஸ்.பி.,யிடம் மிக்கேல் புகார் அளித்தார். காளையார்கோவில் போலீசார் சேசுராஜ், சகாய ராணி மற்றும் பத்திர எழுத்தர், சார் பதிவாளர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.