உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிடப்பில் போடப்படும் வழக்குகள்

கிடப்பில் போடப்படும் வழக்குகள்

திருப்புவனம்: திருப்புவனத்தில் பல்வேறு சம்பவங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரை குற்றவாளிகள் அடையாளம் காணப்படாததற்கு காரணம் என்ன என கேள்வி எழுந்துள்ளது. திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ.,க்கள், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் என 53 பேர் பணிபுரிகின்றனர். சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்திருப்பதால் காவல்நிலைய எல்லை பரந்து விரிந்துள்ளது. போதிய போலீசார் இல்லாததால் பல வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறியப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சி.சி.டி.வி., பதிவு இருந்தாலும் குற்றவாளிகள் பிடிபடாமல் இருப்பது மக்களுக்கு போலீசார் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வருகிறது. ஜூலை 24ல் கழுகேர்கடை விலக்கு எதிரே கால்வாயில் அடையாளம் தெரியாத பெண் உடல் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர். இதில் இறந்தவர் யார் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என இதுவரை கண்டறிய முடியவில்லை. ஆகஸ்ட் 20ல் நான்கு வழிச்சாலையை ஒட்டி வில்லியரேந்தல் ஊர்க்காவலன் சுவாமி கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்றதுடன் அவர்கள் வந்த டூவீலரையும் விட்டு விட்டு தப்பினர். இன்று வரை அவர்கள் யார் என கண்டறிய முடியவில்லை. ஆகஸ்ட் 29ம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மக்கள் வழங்கிய மனுக்கள் வைகை ஆற்றில் கண்டெடுக்கப்பட்டன. இந்த வழக்கிலும் இதுவரை குற்றவாளிகள் யார் என தெரியவில்லை. செப்டம்பர் 10ம் தேதி வைகை ஆற்றங்கரையில் வாக்காளர் அடையாள அட்டை கண்டறியப்பட்டன. இதுகுறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். புகார்கள் குறித்து வழக்கு பதிவு செய்வதுடன் சரி மேலும் அது குறித்து போலீசார் விசாரிப்பதே கிடையாது. அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதும் கிடையாது. இதனால் திருப்புவனம் காவல் நிலையத்தில் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. போலீசார் தரப்பில் கூறுகையில்: 130 போலீசார் இருக்க வேண்டிய இடத்தில் 50 போலீசார் மட்டுமே உள்ளோம். இதில் தினசரி பாரா, கோர்ட், பாதுகாப்பு பணி, விபத்து உள்ளிட்டவற்றிற்கே போலீசார் சென்று விடுகின்றனர். வழக்குகளை விசாரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ