வறட்சியால் உச்சத்தில் தேங்காய் விலை; ஒரு தேங்காய் 50 ரூபாய்
திருப்புவனம்: தமிழகத்தில் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் வறட்சி காரணமாக தேங்காய் விளைச்சல் அதிகமாக பாதிக்கப்பட்டு விலை உச்சத்தில் உள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட வைகை ஆறு பாயும் சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவு தென்னை மரங்கள் உள்ளன. திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தென்னை மரங்களில் இருந்து 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் அறுவடை செய்யப்படும். சாதாரணமாக ஒரு மரத்திற்கு 25 முதல் 35 தேங்காய் வரை கிடைக்கும், வருடத்திற்கு சராசரியாக ஒரு மரத்தில் இருந்து 150ல் இருந்து 200 தேங்காய்கள் வரை கிடைக்கும். திருப்புவனம் வட்டாரத்தில் மழை குறைந்ததால் காய்ப்பு திறனும் குறைந்து விட்டது. பம்ப்செட் வைத்து தண்ணீர் பாய்ச்சினாலும் மழை பெய்தால் தான் விளைச்சல் அதிகரிக்கும், கோடை மழை இல்லாததுடன் தென்மேற்கு பருவமழையும் இன்னமும் தொடங்காததால் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. 25 தேங்காய் கிடைக்கும் இடத்தில் ஒரு மரத்திற்கு 10 காய்கள் வரையே கிடைப்பதால் தேங்காய்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து முகூர்த்த நாட்கள் அதிகமாக வருவதால் திருமண விழாக்கள் உள்ளிட்டவற்றிற்கு தேங்காயின் தேவையும் அதிகரித்துள்ளதால் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தேங்காய் 65 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் 500 கிராம் எடையுள்ள ஒரு தேங்காய் ரூபாய் 40 முதல் 50 என விற்பனை செய்யப் படுகிறது.