உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பனி, வெயிலால் தென்னை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது: தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்பு

பனி, வெயிலால் தென்னை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது: தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்பு

வைகை ஆற்றை ஒட்டியுள்ள திருப்புவனம் வட்டாரத்தில் ஒன்றரை லட்சம் தென்னைமரங்கள் உள்ளன. நெல், வாழைக்கு அடுத்தபடியாக தென்னை விவசாயம் பிரதான விவசாயமாக மேற்கொள்ளப்படுகிறது. திருப்புவனம் வட்டாரத்தில் பெரும்பாலும் நீண்ட காலம் பயன்தரும் நெட்டை மரங்களே அதிகளவு வளர்க்கப்படுகிறது. தென்னை மரங்களில் 50 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் பறிப்பு நடைபெறுகிறது.ஒரு மரத்திற்கு குறைந்த பட்சம் 30 தேங்காய் வரை கிடைக்கும். வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதி என்பதால் பம்ப்செட் மூலம் தண்ணீர் பாய்ச்சி தென்னை விவசாயம் நடைபெறுகிறது. திருப்புவனம் பகுதி தேங்காய்கள் குஜராத், டில்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்புவனம் பகுதி தேங்காய் 200 கிராம் முதல் அதிகபட்சமாக 350 கிராம் வரை எடை இருக்கும்.திருப்புவனம் பகுதி தேங்காய்கள் பெரும்பாலும் சமையலுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாக தென்னை மரங்களில் தேங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்மழை காரணமாக தென்னை மரங்களில் வளர்ச்சி இருந்தாலும் வெள்ளை ஈ தாக்குதலால் மரங்களில் போதிய அளவு தேங்காய் காய்க்கவே இல்லை.கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் வரை ஒரு மரத்திற்கு 40 முதல் 50 தேங்காய்கள் வரை கிடைத்த நிலையில் தற்போது அதில் 50 சதவிகிதம்தான் கிடைத்து வருகிறது. வருடத்திற்கு நான்கு முறை அறுவடை நடந்த நிலையில் தற்போது மூன்று முறையாக குறைந்து விட்டது. தமிழகம் முழுவதும் பருவ கால மாற்றங்களால் மனிதர்கள் மட்டுமல்ல மரங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. பகலில் வெயில், இரவில் பனிப்பொழிவு காரணமாக தென்னை மரங்களில் இருந்து குரும்பை உதிர்ந்து வருகின்றன. விவசாயிகள் கூறுகையில், தென்னம்பாளை பிடித்த நிலையில் அவற்றில் பிடிக்கும் காய்கள் வெயில், பனியை தாங்க முடியாமல் உதிர்ந்து வருகின்றன. அதனையும் மீறி விளையும் தேங்காய்களின் எடை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் வரை ஒரு தேங்காய் 10 முதல் 12 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 14 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ 45 ரூபாய் என விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 60 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. தைப்பூசம், மாசி சிவராத்திரி என அடுத்தடுத்து விழாக்கள் வருவதால் விலை இன்னமும் உயர கூடும் என வியாபாரிகள் தெரிவித்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி