உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஒப்பந்ததாரரிடம் அபராதம் வசூல்

ஒப்பந்ததாரரிடம் அபராதம் வசூல்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பிரமனுார் கண்மாயில் அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவையும் தாண்டி மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு 42 லட்ச ரூபாய் அபாராதம் விதித்த நிலையில் அதனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் நேற்று திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பிரமனுார் கண்மாயின் உட்புறம் உள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்ற வனத்துறை சார்பில் மதுரையைச் சேர்ந்தவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இரண்டரை மாதத்திற்குள் நான்கு எக்டேர் பரப்பளவில் உள்ள நாட்டு கருவேல மரம் மற்றும் வேலி கருவேல மரங்களை வெட்ட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனையும் தாண்டி ஒப்பந்ததாரர் மேலும் பத்து ஏக்கர் பரப்பளவில் மரங்களை வெட்டியதாக பிரமனூர் மற்றும் வாடி கிராம விவசாயிகள் குற்றம் சாட்டி கடந்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பழையனூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வருவாய்த்துறை விசாரணையில் அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவையும் தாண்டி கூடுதல் பரப்பளவில் மரம் வெட்டியது கண்டறியப்பட்டு கோட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பி இருந்தனர்.சிவகங்கை கோட்டாட்சியர் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவையும் தாண்டி, கூடுதல் பரப்பளவில் 41 லட்சத்து 29 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள மரம் வெட்டி அகற்றப்பட்டுள்ளதால் ஒப்பந்ததாரர் அந்த தொகையை செலுத்த உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஒப்பந்ததாரரிடம் இருந்து அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், விரைவில் ஒப்பந்ததாரரிடம் அபராத தொகையை வசூலிக்க வேண்டும் என நேற்று திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் மனு அளித்தனர். தாசில்தார் இல்லாத நிலையில் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமமக்களை சமாதானம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை