உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை அருகே மழைநீர் வரத்துக்கால்வாய் தடுப்பு கோர்ட் உத்தரவை மீறுவதாக வனத்துறை மீது புகார்

மானாமதுரை அருகே மழைநீர் வரத்துக்கால்வாய் தடுப்பு கோர்ட் உத்தரவை மீறுவதாக வனத்துறை மீது புகார்

மானாமதுரை: மானாமதுரை அருகே ஐகோர்ட் கிளை உத்தரவை மீறி மழை நீர்வரத்துக் கால்வாய்கள் தடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் மீது 10 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மானாமதுரை செய்களத்துார் அருகே நத்தபுரக்கி, கண்மாய்பட்டி, என். வலசை, சிப்பிப்பிலியேந்தல்,சந்திரனேந்தல், நெடுங்குளம்,புளிச்சிக்குளம், குருந்தங்குளம்,செய்களத்தூர் சின்னக் கண்மாய், வஞ்சிக்குளம் ஆகிய 10 கண்மாய்கள், மழைநீரை மட்டுமே நம்பியுள்ள கண்மாய்களாகும்.மேற்கண்ட கண்மாய்களுக்குச் செல்லும் மழைநீர் வரத்தை தடுத்து வனத்துறையினர் குருந்தங்குளம் அருகே சில மாதங்களுக்கு முன்பு நாற்றங்கால் பண்ணை அமைக்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறி 10 கண்மாய் பாசன விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டது. விவசாயிகள் சார்பில் ராமமுருகன், கோவிந்தராஜ்,பாலகிருஷ்ணன் ஆகியோர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து நீதிபதிகள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் செய்களத்துார் ஊராட்சியில் சிறப்புக் கிராமசபையை கூட்டி ஒப்புதல் பெற்றால் மட்டுமே செய்களத்துாரில் வனத்துறை நாற்றாங்கால் பண்ணை அமைக்கலாம் என்றும் பொதுமக்கள் கிராமசபையில் ஒப்புக் கொள்ளாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட புஞ்சை நிலத்தில் எவ்வித வேலையும் செய்தல் கூடாது எனவும் உத்தரவிட்டனர். கடந்த மார்ச் 30ம் தேதி அப்போதைய மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் செய்களத்துாரில் நடந்த சிறப்புக்கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கல்குறிச்சி மற்றும் செய்களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட 10 கண்மாய் பாசன விவசாயிகளும் வனத்துறையினரின் அத்துமீறல்களால் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முற்றிலும் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வனத்துறை கொண்டு வந்த சிறப்புத் தீர்மானத்தை நிராகரித்தனர். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கிராம சபையில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் நாற்றாங்கால் பண்ணையை சுந்தரநடப்பில் உள்ள மத்திய நாற்றாங்கால் பண்ணைக்கு மாற்றி எடுத்துச் செல்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து வழக்கு முடிவுக்கு வந்தது. ஆனால் ஐகோர்ட் கிளை உத்தரவை மதிக்காத வகையில் வனத்துறையினர் கடந்த 4 மாதங்களாக மரக்கன்றுகள் தயார் செய்வதை நிறுத்தவில்லை என கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். காவிரி,வைகை, குண்டாறு பாசன சங்க மாநில செயலாளர் ராமமுருகன் கூறுகையில்,மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டும் வனத்துறையினர் அதனை நிறைவேற்றாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செய்களத்துாரில் உள்ள நாற்றாங்கால் பண்ணையை உடனடியாக அகற்றி 10 கண்மாய்களுக்குச் செல்லும் மழை நீர் வரத்துக்கால்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் மீண்டும் பல்வேறு போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை