பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி; ஆசிரியர்களை அலைக்கழித்ததாக புகார்
காரைக்குடி : காரைக்குடியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பலர் திருப்பி அனுப்பப்பட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவடைந்தது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிந்த நிலையில், நேற்று முன்தினம் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. ஏப். 30 வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் காரைக்குடி என இரு இடங்களில் திருத்தும் பணி நடைபெறுகிறது. காரைக்குடி தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.இப் பணிக்கு, அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.தேவகோட்டை, காரைக்குடி, சாக்கோட்டை, திருப்புத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்கள் நேற்று வந்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த பலருக்கு திருத்தும் பணி ஒதுக்கப்படாததால் திரும்பினர். ஆசிரியர்கள் கூறுகையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தனியார் பள்ளி ஆசிரியர்களே அதிகளவில் நிராகரிக்கப்பட்டுள்ளனர். வெகு தொலைவில் இருந்து வந்த ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஏற்கனவே ஆசிரியர்களை தேர்வு செய்து விட்டு பெயரளவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் குறைவான சம்பளமே பெறுகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணி மூலம் பயன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதிகாரிகள் கூறுகையில், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தாலும் சீனியாரிட்டி படியே தேர்வு செய்யப்படுகிறது. சீனியாரிட்டி இல்லையென்றால் அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்தாலும் திருப்பி அனுப்பப்படுவர். பேப்பரின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்து அதில், அதிக பேர் வரவில்லை என்றால் விடைத்தாள் திருத்துவதில் சிக்கல் ஏற்படும். அதனால், மொத்தமாக அழைப்பு விடுத்து தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்வது வழக்கமாக நடப்பது தான். தனியார் பள்ளி என்று திருப்பி அனுப்புவதில்லை. 450 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.