காட்சிப்பொருளான போலீஸ் செக்போஸ்ட் கடத்தலுக்கு வழி வகுப்பதாக புகார்
காரைக்குடி : காரைக்குடி உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் செக்போஸ்ட்கள், பல ஆண்டுகளாக பயன்பாடின்றி காட்சி பொருளாக இருப்பதால் கடத்தலுக்கு வழி வகுப்பதாக புகார் எழுந்துள்ளது.காரைக்குடி காவல் உட்கோட்டத்தில் காரைக்குடி வடக்கு, தெற்கு, அனைத்து மகளிர், அழகப்பாபுரம், குன்றக்குடி, பள்ளத்துார், செட்டிநாடு, சாக்கோட்டை, சோமநாதபுரம் மற்றும் குற்றப்பிரிவு என 10 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன.சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள, புதுக்கோட்டை மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள சாக்கோட்டை, புதுவயல் கானாடுகாத்தான், நேமத்தான்பட்டி, கொத்தமங்கலம், செங்கரை நாலு ரோடு காரைக்குடி நுழைவு வாயில்களில் போலீஸ் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளன. இந்த செக் போஸ்ட்களில், முன்பு முறையாக போலீசார் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணி நடந்தது.ஆனால் கடந்த சில வருடங்களாக பெரும்பாலான செக் போஸ்ட்களில் போலீசார் பணியமர்த்தப்படவில்லை. இதனால் பிற மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் சோதனை செய்யப்படுவதில்லை.போதைப் பொருள், ரேஷன் அரிசி, திருட்டு வாகனங்கள் உட்பட பலவும் எளிமையாக சிவகங்கை மாவட்டத்திற்குள் வந்து செல்லும் சூழல் நிலவுகிறது. செக் போஸ்ட்களில் போலீசார் முழு நேர சோதனை பணியில் ஈடுபட்டிருந்த போது குற்றச் சம்பவங்கள் முன்னதாகவே தடுக்கப்படுவதோடு போதைப் பொருட்கள் கடத்தல் முழுமையாக தடுக்கப்பட்டது.தற்போது செக் போஸ்ட்களில் போலீசார் இல்லாததால், போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதோடு இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாவதாக புகார் எழுந்துள்ளது. தவிர, புதுவயல், பள்ளத்தூர் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலும் தாராளமாக நடந்து வருகிறது.