உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வரி பாக்கி வசூலிக்க ஜவுளிக்கடை முன் குப்பைத்தொட்டி வைத்த மாநகராட்சி

வரி பாக்கி வசூலிக்க ஜவுளிக்கடை முன் குப்பைத்தொட்டி வைத்த மாநகராட்சி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வரி பாக்கி வைத்துள்ள ஜவுளிக்கடை வாசலில் குப்பைத்தொட்டி வைத்து வரி வசூலில் மாநகராட்சியினர் ஈடுபட்டதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர். காரைக்குடி மாநகராட்சியில் 100 சதவீத வரி வசூல் இலக்கை அடைய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வரி கட்டாத கட்டடங்களுக்கு சீல் வைப்பது, வரிவசூல் செலுத்தாத வணிக வளாகங்கள் முன்பு குழி தோண்டுவது என பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் வரிபாக்கி செலுத்தாததாக கூறி ஜவுளிக்கடை முன்பு மாநகராட்சி அதிகாரிகள் குப்பை தொட்டியை வைத்தனர். கடையில் இருந்த ஊழியர்களும், கடைக்குள் செல்ல முடியாமல் வாடிக்கையாளர்களும் அதிருப்தி அடைந்தனர்.வணிக வளாக உரிமையாளர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் முறையாக வரிபாக்கி செலுத்தி வருகிறோம். தற்போது, மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் தவறாக அளவீடு செய்து கூடுதலாக வரி கட்ட கட்டாயப்படுத்துவதாகவும், முறையாக கட்டடங்களை அளவீடு செய்து அதற்கான வரியை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்து வருகின்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மார்ச் இறுதிக்குள் பாக்கியுள்ள வரி தொகையை வசூல் செய்ய வேண்டும். வரி வசூலை முறையாக செய்தால் தான் மாநகராட்சியில் பணிகளை தொடர முடியும். கட்டட அளவீட்டில் குழப்பம் உள்ளதாகவும், கூடுதல் வரி வசூல் செய்வதாகவும் புகார் வந்துள்ளது. அதுபோன்ற கட்டடங்களை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ