உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்பத்தூரில் சாகுபடி பணி மீண்டும் ...துவக்கம்: காய்ந்த பயிர்களுக்கு உயிர் கொடுத்த மழை

திருப்பத்தூரில் சாகுபடி பணி மீண்டும் ...துவக்கம்: காய்ந்த பயிர்களுக்கு உயிர் கொடுத்த மழை

திருப்பத்தூர் : திருப்பத்தூரில் போதிய மழையின்றி கண்மாய்கள் பெருகாத நிலையில் குறைவான அளவில் நெல் சாகுபடியாகி உள்ளது. மழை இல்லாமல் பயிர்கள் வாடிய நிலையில் போதிய மழை பெய்து விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படத்தி சாகுபடி பணியை தொடர வைத்துள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் பகுதியில் இந்த ஆண்டு போதிய மழையில்லாமல் ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் நெல்சாகுபடி பணிகளை துவங்கவில்லை. ஆவணி கடைசியில் தான் பெரும்பாலான விவசாயிகள் நாற்றங்கால் விதை பாவாமல் நேரடி விதைப்பு செய்தனர். ஒரு சில நாட்கள் மட்டும் மழை பெய்தது. தொடர்ந்து மழை இல்லாமல் நாற்றுக்கள் நலிவடைந்தன. வயலில் உள்ள ஈரப்பதத்தில் பயிர்கள் தாக்குப்பிடித்தன. வாடிய பயிர்கள் செழித்தன என்.புதுார் போன்ற பகுதிகளில் கண்மாய்களில் தேங்கிய நீரை மோட்டார் மூலம் பயிர்களுக்கு பாய்ச்சத்துவங்கினர். கண்மாய்களிலும் நீர்மட்டம் குறைந்தது. கண்மாய்களில் நீர் இல்லாத வெளியாத்துார் பகுதிகளில் பயிர்கள் வாடத்துவங்கின. வஞ்சினிப் பட்டியில் போதிய நீரின்றி உரம் போட்டதால் பயிர்கள் சிவந்து போனது. மழையை விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை இன்றி பனி பெய்யத் துவங்கியது. விவசாயிகள் கலங்கிய நிலையில், திடீர் புயலால் திருப்புத்துார் பகுதியில் நவ.24 ல் ஒரு நாள் முழுவதும் 44மி.மீ அளவில் மழை பெய்தது. வாடிய பயிர்கள் செழிப்படைந்துள்ளன. விவசாயிகள் நம்பிக்கை வயலில் உள்ள ஈரப்பதம் மேலும் 10 முதல் 15 நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும். இதனால் கண்மாயிலிருந்து நீரைப்பாய்ச்சும் பணிகளையும் விவசாயிகள் நிறுத்தியுள்ளனர். உரமிடும் பணிகளை துவங்கியுள்ளனர். அடுத்த 10 நாட்களுக்குள் நல்ல மழை பெய்தால் இந்த ஆண்டு நெல்சாகுபடியில் பயிரைக் காப்பாற்றி அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். விவசாயிகள் கூறுகையில், தற்போது பெய்துள்ள மழையால் காயவிருந்த பயிர்கள் உயிர் பிழைத்துள்ளன. கடந்த ஒரு மாதமாக மழையில்லை. கண்மாயிலும் ஓரளவே தண்ணீர் இருந்தது. மடை பராமரிப்பில்லாமல் பாய்ச்ச முடியாமல் மணிக்கு ரூ 200 செலவழித்து தண்ணீர் பாய்ச்சினோம். இனியாவது நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்த்தோம்.பெய்த மழையும் ஒரே நாளில் நின்று விட்டது. இன்னும் 15 நாட்களுக்கு பயிருக்கு ஈரம் இருக்கும். நடுகை செய்தவர்களுக்கு இன்னும் நான்கு தண்ணீர் வேண்டும். விதைப்பு செய்தவர்களுக்கு 3 தண்ணீர் வேண்டும். இதனால் ஒரு நல்ல மழை பெய்து கண்மாயில் ஒரு மாத அளவில் நீர் சேர்ந்தால் தான் நல்லது' என்றனர். பொ.ப.துறையினர் கூறுகையில், தற்போதைய மழையால் மணிமுத்தாறில் நீர்வரத்து மீண்டும் ஏற்பட்டது. நேற்று காலைவரை வடமாவளி அணைக்கட்டு,ஐநகால் அணை மூலமாக 35 கண்மாய்களுக்கு ஓரளவு நீர்வரத்து காணப்பட்டது. 30 முதல் 40சதவீதம் நீர் சேககரமாகியுள்ளது. விருசுழி,பாலாற்றில் நீர் வரத்தில்லை. மழைநீரால் 20 சதவீதத்திற்கு மேல் பல கண்மாய்களில் நீர் உள்ளது. அடுத்த புயலில் 50 சதவீத கொள்ளளவை கண்மாய்கள் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்றனர். இந்தாண்டு எதிர்பார்த்த அளவில் வழக்கமான மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டை விட மிகவும் குறைவாக திருப்புத்துார் பகுதியில் நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வப்போது மழை பெய்து விவசாயிகளை தொடர்ந்து சாகுபடி பணிகளை தொடர வைத்துள்ளது. அடுத்து நல்ல மழை பெய்தால் விவசாயிகளின் முயற்சிக்கு பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை