ஆன்லைனில் ரூ.27 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சிவகங்கை:ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகக்கூறி இளைஞரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே செவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் சதீஷ்குமார் 36. இவர் தனியார் நிறுவனத்தில் மருத்துவ பொருட்கள் விற்பனையாளராக உள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன் முகநுாலில் ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ஒரு விளம்பரத்தை பார்த்தார்.அந்த விளம்பரத்தில் உள்ள லிங்கை தொடர்பு கொண்டார். அந்த லிங்கில் இருந்து சதீஷ்குமார் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தது. அந்த குறுஞ்செய்தியில் உள்ள நபரை சதீஷ்குமார் தொடர்பு கொண்டார்.அவர் கூறியதை நம்பி சதீஷ்குமார் அவர் கூறிய 7 வங்கி கணக்கில் 14 தவணையில் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்தார். சில மாதங்கள் மட்டும் அவரது வங்கி கணக்கில் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வரை வரவு வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த நபர் கூறிய லாப தொகை சதீஷ்குமார் வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை.சதீஸ்குமார் அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். மீண்டும் முதலீடு செய்தால் தான் லாபத்தொகை கிடைக்கும் என்று அவர் கூறினார். சுதாரித்து கொண்ட சதீஷ்குமார் தன்னை ஏமாற்றிய நபர் மீதும் இழந்த பணம் ரூ.27 லட்சத்து 71 ஆயிரத்து 664 மீட்டு தரும்படியும் சிவகங்கை சைபர் கிரைம்போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோசடி நபரை தேடிவருகின்றனர்.