மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
சிவகங்கை: மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக சர்வ கட்சியினர், வர்த்தகர்கள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக்குகளில் சேகரமாகும் மருத்துவ கழிவுகளை சேகரித்து, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிப்பு செய்வதென, அரசிடமும், சுற்றுச்சுழல் துறையிடம் அனுமதி பெற்றுள்ளனர். இங்கு மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை நிறுவினால் கிராம மக்கள் நோய் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். எனவே சுத்திகரிப்பு ஆலைக்கு தடை வி திக்க வேண்டும் என மானாமதுரையில் பல்வேறு அமைப்பினர் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆலை கட்டுமான பணியை நிறுத்தி வைக்குமாறு, முந்தைய கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டும், கட்டுமான பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி மானாமதுரையில் இன்று (செப்., 16) கடையடைப்பு மற்றும் சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். பேச்சு வார்த்தையில் தோல்வி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பொற்கொடி தலைமையில் சர்வ கட்சியினர், வர்த்தகர்களிடையே சமரச கூட்டம் நடத்தினர். அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத், கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் மற்றும் மாசுகட்டுப்பாட்டு அலுவலர்கள் சர்வ கட்சியினர், வர்த்தகர்களிடையே பேச்சு வார்த்தை நடந்தது. மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூட அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். இன்று (செப்.,16) மானாமதுரையில் கடையடைப்பு மற்றும் சிப்காட் வளாகம் முன் நடக்க இருந்த முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சர்வ கட்சியினர், வர்த்தகர்கள் தெரிவித்தனர்.