பதவி உயர்வு இட ஒதுக்கீடு அமல்படுத்த மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை
தேவகோட்டை: நான்கு சதவீதம் பதவி உயர்வு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மாற்றுத்திறனாளிகள் தீர்மானம் நிறைவேற்றினர். அனைத்துத் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் தேவகோட்டையில் நடந்தது. வட்டார தலைவர் வள்ளியப்பன், செயலாளர் ராமு, பொருளாளர் முத்துமாரி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருமுருகன் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் மாநில தொழில்நுட்ப பிரிவு தொடர்பாளர் பாற்கடல் பலராமன், மாவட்ட துணைத்தலைவர்கள் அரிய குமார், பூமிராஜ், மாவட்ட இணை செயலாளர் வள்ளியப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பூமிநாதன், சுலக்சனா, கிருஷ்ணமூர்த்தி, ஐஸ்வர்யா பங்கேற்றனர். பதவி உயர்விற்காக வழங்கப்பட்ட 4 சதவீதம் இட ஒதுக்கீட்டை உடனடியாக மாற்று திறனாளிகள் அனைவருக்கும் பதவி உயர்வில் அமல்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்று திறனாளிகள் உடல்நிலையை கருத்தில் கொண்டு வெஸ்டர்ன் டாய்லெட், மற்றும் சாய்தளம் வசதி அமைத்தல், மாற்றி அமைத்த கார்களுக்கு வழங்குவது போல் ஆட்டோமேட்டிக் கார்களுக்கு வழங்கும் வரிச்சலுகை, ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட நிலையில் மாற்று திறனாளிகளுக்கு உரிய சலுகை சதவீதத்தை குறைக்காமல் உள்ளதால் உடனடியாக குறைக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் மாயாண்டி நன்றி கூறினார்.