மதுரை -ராமேஸ்வரம் சாலையில் ஆபத்தான கனரக இயந்திரங்கள் வாகன ஓட்டிகள் அச்சம்
மானாமதுரை : மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை பகுதியில் பாதுகாப்பின்றி ஆபத்தான முறையில் கனரக இயந்திரங்களை லாரிகளில் கொண்டு செல்வதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாலம் கட்டுமான பணி, கண்மாய், சாலை மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக ராட்சத இயந்திரங்கள், மணல் அள்ளும் இயந்திரங்கள், ரோடு ரோலர்கள் போன்றவற்றை நீண்ட துாரத்திற்கு ரோட்டில் ஓட்டி சென்றால் செலவு அதிகரிக்கும், நீண்ட நாள் ஆகும் என்பதால் ராட்சத டிரைலர் லாரிகளில் பாதுகாப்பற்ற, ஆபத்தான முறையில் ஏற்றி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.இவ்வாறு கனரக இயந்திரங்களை கொண்டு செல்லும் போது உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றி இரும்பு சங்கிலியால் கட்டி எச்சரிக்கை சிவப்பு கொடி கட்டப்பட்டு மிதமான வேகத்தில் இயக்க வேண்டும், ஆனால் எதுவும் பின்பற்றாமல் மானாமதுரையில் கனரக இயந்திரங்களை பாதுகாப்பற்ற முறையில் லாரிகளில் கொண்டு செல்கின்றனர்.இதை போலீசாரும் கண்டு கொள்ளாததால் இந்த நிலை தொடர்கிறது.