அரசு பள்ளிகளில் ஆசிரியர், வகுப்பறை பற்றாக்குறை மாணவர் சேர்க்கை சரிவால் கல்வியாளர்கள் கவலை
மானாமதுரை: சிவகங்கை மாவட்ட அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர்கள்,வகுப்பறை பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகள் 196க்கு மேற்பட்டவையும், 1100க்கு மேற்பட்ட துவக்க பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.மேலும் ஏராளமான அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வரும் நிலையில் சில வருடங்களாக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது, போதிய வகுப்பறை இல்லாதது, கழிப்பறைகளை சரியாக பராமரிக்காமல் இருப்பது, ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களினால் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில அரசு துவக்க பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் ஒரே ஆசிரியர் பணியாற்றி வரும் நிலையில் அவரே அனைத்து வகுப்பு மாணவர்களையும் கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் ஒவ்வொரு பாடப்பிரிவு களுக்கும் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் ஒரு ஆசிரியர் 2அல்லது 3 பள்ளிகளில் வாரத்திற்கு தலா 2 நாட்கள் பணிபுரியும் நிலைமை உள்ளது. பெற்றோர்கள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் வருடம் தோறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.ஆனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் வருடம் தோறும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே தான் வருகின்றன. தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 5 ஆயிரம் தலைமை ஆசிரியர், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. பெரும்பாலான அரசு நடுநிலைப் பள்ளிகளில் முடித்து வரும் மாணவர்களுக்கு ஆங்கிலம் சரியாக எழுத, படிக்க தெரியாமல் உள்ளனர். தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இல்லாத காரணத்தினால் ஒரே வகுப்பறையில் அனைத்து வகுப்பு மாணவர்களையும் அமர வைத்து பாடங்களை நடத்துவதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டு வருகிறது.ஆகவே போதிய வகுப்பறைகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 வருடங்களாக அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் துாய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல் இருப்பதால் துாய்மை பணியாளர்கள் வேலைக்கு வரவில்லை.பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்யப்படாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர் என்றனர்.