சிவகங்கையில் மருத்துவமனையில் மூதாட்டியை ஏமாற்றி நகை பறிப்பு
சிவகங்கை: சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவருக்கு உதவியாக இருந்த மூதாட்டியை ஏமாற்றி திருமாங்கல்யத்தை வாங்கிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். இளையான்குடி அருகே உள்ள அயன்குறிச்சியை சேர்ந்தவர் குப்புசாமி 75. இவர் உடல்நலக்குறைவால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரது மனைவி சந்தானம் 70 உதவிக்காக இருந்தார். அடையாளம் தெரியாத ஒருவர் மருத்துவர் போல் நடித்து குப்புசாமிக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ அறிக்கையை பார்த்து சந்தானத்திடம் அவருடைய கணவருக்கு உடனடியாக மருந்து வாங்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய சந்தானம் அவருடன் மருத்துவமனை விட்டு வெளியே வந்துள்ளார். தனது கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்புள்ள திருமாங்கல்யத்தை கழற்றி அந்த நபரிடம் கொடுத்துள்ளார். நீங்கள் சென்று அவருடன் இருங்கள் நான் விற்று மருந்து வாங்கி வருகிறேன் என கூறி அந்த நபர் அங்கிருந்து தப்பித்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்தானம் மருத்துவமனையில் இருந்த பயிற்சி டாக்டரிடம் தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். சிவகங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.