உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேலை உறுதித்திட்ட மாற்றுத்திறனாளி ஊழியர்கள்... அலைக்கழிப்பு : போட்டோ பதிவாகாததால் வேலை இல்லை

வேலை உறுதித்திட்ட மாற்றுத்திறனாளி ஊழியர்கள்... அலைக்கழிப்பு : போட்டோ பதிவாகாததால் வேலை இல்லை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணிக்காக அலைக்கழிக்கப்படுவதால் அவதிக்குள்ளாகின்றனர். மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் உடல் உழைப்பு பணிகளை செய்யும் திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழக்கமான தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவுகளில் 50 சதவீதம் மட்டுமே ஒதுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு பணி வழங்குவதையும், அவர்கள் முழு ஊதிய வீதத்தை பெறுவதையும் ஊராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், அவர்களின் மனித வேலை நாட்களையும் அதிகரிக்க வேண்டும் என பல்வேறு வழிகாட்டுதல் உள்ளது. இந்நிலையில் சிங்கம்புணரி பகுதியில் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் இப்பணியை பெற அலைக்கழிக்கப்படுகின்றனர். அனைத்து பணியாளர்களுக்கும் பணி நடைபெறும் இடத்தில் புகைப்பட வருகைப் பதிவேடு எடுக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு குழுவாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாகவும் புகைப்பட வருகைப் பதிவேடு எடுக்கப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால் இவ்வொன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் சிலருக்கு போட்டோ பதிவாகவில்லை எனக் கூறி பணி மறுக்கப்படுகிறது. அ.காளாப்பூர் ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முதியோர்களான கண்ணாத்தாள், அன்பரசி ஆகியோருக்கு புகைப்பட வருகைப் பதிவேட்டில் போட்டோ பதிவேற்றம் ஆகாததால் அவர்கள் வேலை பார்த்து 2 நாட்களுக்கும் சம்பளம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மீண்டும் பணிக்கு சென்ற நிலையில் அப்போதும் போட்டோ பதிவாகவில்லை எனக்கூறி ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலகப் பிரிவு மாடியில் செயல்படும் நிலையில், மாற்றுத்திறனாளி முதியோர்களால் படியில் ஏற முடியாமல் வாசலிலேயே அமர்ந்திருந்தனர். அங்கு வந்த அலுவலர்கள் அப்பெண்களிடம் விசாரணை நடத்தி விரைவில் மீண்டும் பணி கிடைக்க ஏற்பாடு செய்வதாக அனுப்பி வைத்தனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர்களை வீண் அலைச்சலுக்கு ஆளாக்காமல் அந்தந்த ஊராட்சிகளிலேயே அவர்களின் குறைகளை கேட்டறிந்து இத்திட்டத்தில் உரிய பணி வாய்ப்புகளை வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ