உழவர் அலுவலர் தொடர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: தோட்டக்கலை அலுவலர்கள் வலியுறுத்தல்
சிவகங்கை: தமிழகத்தில் தோட்டக்கலைத்துறையை, வேளாண்மை துறையுடன் இணைக்கும் உழவர் அலுவலர் தொடர் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் 1979 ல் தோட்டக்கலைத்துறை உருவானது. 2007 ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மறுசீரமைக்கப்பட்டது இந்த துறை. இத்துறையில் தலைவர், இயக்குனர், கூடுதல் இயக்குனர், இணை இயக்குனர்கள் முதல் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வரை 2,614 பேர் பணிபுரிகின்றனர். இத்துறையில் தற்போது 80 சதவீதம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதன் கீழ் 75 தோட்டக்கலை பண்ணை, 25 அரசு பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டு தோறும் 16.08 லட்சம் எக்டேரில் சாகுபடி செய்து, 2.35 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித்தருவதில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயம் சார்ந்த அந்நிய செலாவணியில் 35 சதவீதத்தை ஈட்டி தருகிறது. இச்சிறப்பு பெற்ற துறை கடந்த 3 ஆண்டுகளாக முறையற்ற விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டு, மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தோட்டக்கலை பண்ணைகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் பெற்று தருகிறது. இந்நிலையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற பெயரில், வேளாண்மை துறையுடன் இணைக்கும் நோக்கில், உதவி தோட்டக்கலை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்துள்ளனர். வேளாண்மை துறையை விட தோட்டக்கலைத்துறைக்கு தான் அதிகளவில் களப்பணியாளர்கள் தேவைப்படும். இதன் மூலமே தோட்டக்கலை பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க முடியும். எனவே உதவி தோட்டக்கலை அலுவலர்களை, வேளாண்மை துறைக்கு பணியிட மாற்றம் செய்தது முறையானது அல்ல. காய்கறி, பழம், தானியப்பயிர்கள், மருத்துவ, வாசனை பயிர்கள் குறைந்த அளவில் பயிரிடப்பட்டாலும், உற்பத்தி திறன் வேளாண் பயிர்களை விட அதிகம். எனவே தோட்டக்கலைத்துறையை, வேளாண்மை துறையுடன் இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இதனால் தோட்டக்கலைத்துறையில் பட்டம், பட்டயம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் வீணாகும். முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை ரத்து செய்து, பணியிட மாற்றம் செய்யப்பட்ட உதவி தோட்டக்கலை அலுவலர்களை மீண்டும் அவர்களது துறையிலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.