விளை நிலத்தில் மின்கம்பங்கள் எதிர்த்த விவசாயிக்கு மிரட்டல்
பூவந்தி: சிவகங்கை மாவட்டம்பூவந்தி அருகே அரசனுாரில்அனுமதியின்றி மின்கம்பம் அமைப்பதை எதிர்த்த விவசாயியை தி.மு.க.,வினர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.அரசனுார் அருகே கோவையைச் சேர்ந்த நிறுவனம் சோலார் பேனல்களை நிறுவியுள்ளது. அங்கிருந்து அரசனுார் துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் கொண்டு செல்ல இரும்பு மின் கம்பங்கள் அமைத்து வருகிறது. சோலார் பேனல்கள் அமைக்கும் பணியின் போதே அரசனூர் கிராம சபை கூட்டத்தில் விளை நிலங்கள் வழியாக மின் கம்பங்கள் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதனை மீறி தனியார் நிறுவனம் மின் கம்பங்களை அமைத்து வருகிறது.வாழை பயிரிட்டுள்ள நிலையில் வாழை மரங்களை வெட்டி அகற்றி விட்டு மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயி மணிகண்டன் கூறுகையில், நாங்கள் நீண்ட காலமாக விவசாயம் செய்து வரும் நிலையில் எங்கள் விளைநிலத்தில் பயிரிட்டிருந்த வாழைகளை வெட்டி விட்டு அந்த இடங்களில் 16 மின் கம்பங்கள் அமைத்துஉள்ளனர். கண்மாய் கரை வழியாக மின் கம்பம் அமைத்தால் கூடுதலாக மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் என்பதற்காக எனது நிலத்தின் வழியாக அமைத்துள்ளனர். தட்டி கேட்டதற்கு தி.மு.க.,வினர் போன் செய்து என்னை மிரட்டுகின்றனர். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றார்.