ஆற்றில் முட்புதர், நாணலை அகற்ற அக்கறை காட்டாத அதிகாரிகள் சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்
சிவகங்கை: ஆறுகளில் வளர்ந்துள்ள முட்புதர், நாணல் செடிகளை அகற்ற பொதுப்பணித்துறை அக்கறை காட்டுவதில்லை என சிவகங்கையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அரவிந்த், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமா மகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம், கலெக்டர் பி.ஏ.,(விவசாயம்) தனலட்சுமி, கோட்டாட்சியர் விஜயகுமார், முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார் பங்கேற்றனர். கூட்டத்தில் 10 விவசாயிகளுக்கு ரூ.9.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் நடந்த விவாதம்: ராமசந்திரன், சிவகங்கை: வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், விவசாயம் செய்ய முடியவில்லை. வயலின் ஓரங்களில் மரங்களை நட்டு வளர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர்: ஊரக வளர்ச்சி முகமை மூலம் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் பசுமை குடில் அமைத்து மரக்கன்று வளர்க்கின்றனர். இதை 15,000 மரக்கன்று வளர்க்கும் மையமாக மாற்ற கூறியுள்ளேன். இங்கு விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கப்படும். அய்யாச்சாமி, இளையான்குடி: உப்பாறு, வைகை ஆறு வழித்தடங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என பல முறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்துவிட்டேன். ஆனால், இன்னும் ஆற்றில் உள்ள முட்புதர், நாணல் செடிகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் அக்கறை செலுத்தவில்லை. பாரத்ராஜா, திருப்புவனம்: பேரூராட்சி சார்பில் வழங்கப்பட்ட நிலத்தை தனியார் ஆக்கிரமிக் கின்றனர். இன்றைய சந்தை மதிப்பு சென்ட் ரூ.15 லட்சத்திற்கு விற்கிறது. பேரூராட்சி இடத்தை மீட்டு பாதுகாக்க வேண்டும். கிருஷ்ணன் (வழக்கறிஞர்), சிவகங்கை: சிவகங்கையில் இருந்து 42 கி.மீ., துாரம் செல்லும் சருகணி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பில் 15 கி.மீ., துாரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டனர். மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் பெயரில் உள்ள பட்டாக்களை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.